Monday, July 30, 2012

ஆஸ்திரியா அழகியுடன் அருமையான காஃபி

வேலை நிமித்தமாக ஒரு வாரம் ஆஸ்திரியா சென்றிருந்தேன். அங்கு தான் நடந்தது அந்த அழகான நிகழ்வு. 

அலுவலகத்தில் வழக்கம் போல் அறிமுகப்படுத்தும் கூட்டம் நடந்தது, அங்கு தான் கண்டேன் சாராவை அழகுன்னா  அழகு அப்படி ஒரு அழகு, நம்ம ஊரு பொண்ணுங்ககிட்ட இருக்க எந்த அம்சமும் இல்லை இருந்தாலும் அழகு, (அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே பாட்டு உள்ளுக்குள் கேட்க்க, வாயில் வடிந்த வாட்டர் ஃபால்சை துடைத்துவிட்டு) இருவரும் கை குலுக்கினோம் (பேக்ரௌண்டுல குணா பாட்டு "பார்த்த விழி" பாட்டு தான்). சாரா சிறு குறிப்பு -  என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் அழகை, மாதுளை நிறம், நீல நிறக்கண்கள், கூந்தல் அந்நாட்டவர்க்கே உரித்தான நிறம், இது போதுமென்று நினைக்கிறேன். (இதுக்கு மேல சொல்லி யாரு அடிவாங்குறது, மேலும் நான் கவிஞர் கருப்பு இல்லை)

மதிய உணவு (என்ன வெரைட்டி ரைஸா கிடைக்கும் வல்க்கர் தான்) பர்கர் தான். மாலை மங்கியது, நான் ஹோட்டலுக்கு கிளம்பும் தருவாயில் சாரா அழைத்தாள் (அடுத்த மியூசிக் என் இனிய பொன் நிலாவே கிட்டார் மியூசிக் ஒலித்தது) அப்படியே திரும்பி என்னவென்று வினவினேன் 6 மணிக்கு என்னை அருகில் உள்ள காஃபி ஷாப்பில் சந்திப்பதாகவும் அருகில் இருக்கும் இடங்களை சுற்றிக் காட்டுவதாகவும்  சொன்னாள் (இதற்காகத் தானே ஆசை பட்டாய் என விவேக்கின் குரல் ஒலித்தது) நானும், உங்கள் நேரத்தை என்னோடு செலவு செய்வதற்கு நன்றி என கூறினேன், புன்னகையை உதிர்த்து 6 மணிக்கு சந்திப்போம் எனக்  கூறி மறைந்தாள்.

உள்ளுக்குள்ளே பட்டாம்பூச்சி கூட்டமே பறந்து கொண்டிருந்தது இருக்காதா  பின்னே, வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு பெண்ணுடன் காஃபி, ஊர் சுற்றுதல் இன்று கடவுள் எனக்கு நல்லவராய்த் தெரிந்தார்.

சரியாக 6 மணிக்கு ஆஜரானேன் காஃபி ஷாப்பில், சில வினாடிகளில் அவளும் வந்தால். அவளே இருவருக்கும் மெனு கார்டில் இருந்த மோக்கா காஃபியும் சில இனிப்பு ரொட்டிகளும் ஆர்டர் செய்தால். பேசத் துவங்கினோம், அவள் கேட்ட முதல் கேள்வி Do you have a Girl Friend ?? நமக்கேது அந்த குடுப்பினையெல்லாம்னு நொந்து கொண்டு இல்லை என்று பதில் அளித்தேன், (அவளுக்கும் பாய் ஃபிரண்டு இல்லையாம்) பிறகு அந்த ஊரை பற்றி, சொந்த வாழ்க்கை பற்றி, அவரவர் குடும்பம் பற்றி எல்லாம் பகிர்ந்து கொண்டோம். காஃபியும் வந்தது பருகிக்கொண்டே பேச்சும் தொடர்ந்தது, சில நிமிடங்களில் Cell Phone ஒலிக்க நடுங்கித்தான் போனேன், ஏது வழக்கம் போல் என் Cell Phone Alarm ஒலி கேட்டு பதறியடித்து எழுந்து அடச்சே கனவா என்று சொல்ல நேர்ந்துவிடுமோ என்று எண்ணி தான், நல்ல வேளையாக அவ்வாறு இல்லை என்பதை கிள்ளிப் பார்க்காமல் தெரிந்துகொண்டேன். அவள் அலைபேசியில் பேசி முடித்துவிட்டு, இன்று தன்னால் ஊர் சுற்ற வரமுடியாது என்றும் இந்த வாரத்தில் இன்னொரு நாள் அழைத்துச் செல்வதாகவும் கூறினால் (எல்லாம் உங்க வயித்தெரிச்சல் தான்ப்பா) இப்போ நான் என்ன செய்ய, ஹோட்டலுக்கு போய் தூங்க வேண்டியது தான். நோ ப்ராப்ளம் என்று சொல்லி விதியை நொந்துகொண்டு டாட்டா கூறி விடை பெற்றோம். 

45 நிமிடங்கள் சென்றது தெரியவே இல்லை. பெண்கள் நம் வாழ்வில் சில தருணங்களை அழகாக்கவும், நினைவை விட்டு அகலாமலும் செய்யத் தவருவதில்லை.


ஆஸ்திரியா அழகியுடன் அருமையான காஃபி!!!! 

Thursday, July 26, 2012

குடும்பம் ஒரு கதம்பம்......

அனைவருக்கும் வணக்கம்!!! எனக்கு எழுத பிடுக்கும், ஆனால் ஏனோ தயக்கம் வந்து தொற்றிக்கொள்ளும். கீச்சுலகமும் சில பதிவர்களுமே எனக்கு முன்னோடிகள். அவர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு உங்களின் வசையும், வாழ்த்தும் என்னை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையோடு துவங்குகிறேன் என் பதிவினை.

உங்களிடம் பகிரவிருப்பது முழுக்க முழுக்க எனது குடும்பம் பற்றியே. இது எனது முதல் பதிவென்பதால் பிழைகளை தெரியப்படுத்துங்கள் வரும் பதிவுகளில் திருத்திகொள்கிறேன் நன்றி!!!

சாதாரண நடுத்தர குடும்பத்திலிருந்து வந்தவன் தான் நான். 5 பேர் கொண்ட அழகான குடும்பம். குடும்பத்திற்காகவும் பிள்ளைகளுக்காகவும்  மட்டுமே வாழும் (உழைக்கும்) தாய். சுயநலமில்லாமல் கண்டிப்போடும், கவனத்தோடும், தன் வாழ்வினை எங்களுக்காகவே அர்ப்பணித்த, உழைப்பிற்க்கும், தன்னம்பிக்கைக்கும், முயற்சிக்கும், எனது ரோல் மாடலான என் தந்தை. நண்பனாய், பகைவனாய், தம்பியாய், நாரதனாய் ஏன் சமயத்தில் அறிவுரையாளனாய் திகழும் பாசமிகு தம்பி. வீட்டின் கடைக்குட்டி, தந்தையின் செல்லம், தோழி, பாசக்காரி, கோபக்காரி, தங்கமான தங்கை. இது தான் என் குடும்பம்.

தந்தை சிறுவயதில் தான் பட்ட கஷ்ட்டங்களை எங்களுக்கு எடுத்துரைத்து வாழ்க்கையில்  வ(ழி)லியை தெளிவுபடுத்தினார் அவரின் உழைப்பினால். சேமிப்புடனும், சிக்கனத்துடனும் அதே வேளையில் எங்களுக்கு எள்ளளவும் குறையுமின்றி கவனித்துகொண்ட தாய். கண்டிப்போடே வளர்க்கப்பட்டோம், அந்த வயதில் வேதனையாக தான் இருந்தது இருப்பினும் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லையே, அதன் அருமையை இப்போது உணர்கிறேன். எம்ட்டன் மகன் திரைப்படத்தை ஒப்பிடலாம் என் வாழ்க்கையோடு. நடிகர் பரத்திற்கு நாசர் ஈரல் ஊட்டிவிடும் காட்சி, சொன்ன வேலையை செய்யாமல் அடிவாங்கும் காட்சி, என பல உள்ளன. இதை அந்த படம் பார்க்கும்போது என் தந்தையிடம் கூறியபோது அவரின் பதில், அப்படி இருந்ததினால் தான் இப்படி இருக்கிறீர்கள். அவருக்கு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை, அப்பழுக்கற்ற மனிதர்.

எங்களை 5ஆம் வகுப்பு வரை மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்க வைத்தனர் எங்கள் பெற்றோர். வழக்கம் போல் கல்விக் கட்டணம் உயர்வு, அதனை சமாளிப்பது கடினம், தந்தையின் அரசாங்க வேலை மட்டுமே துணை, பெரிய வருமானம் என்று சொல்லமுடியாது. பிறகு இரவு பகல் பாராமல் கண் விழித்து மொத்த குடும்பமும் உழைத்தோம். வாழ்க்கை சீர்பெற்றது, 10ஆம் வகுப்பு முடித்து தொழில்துறை படிப்பான டிப்ளோமா சேர்ந்தேன், நன்முறையில் தேர்ச்சி பெற்றேன், கேம்பஸ் இன்டர்வியு மூலம் கோயம்பத்தூரில் 2500 ரூபாய் சம்பளத்தில் பணி நியமனம் கிடைக்கபெற்றேன். அந்த சமயத்தில் எனக்கு அது பெரிய தொகை தான். தந்தைக்கு மகிழ்ச்சி, இருப்பினும் 18வயதில் என்னை வேலைக்கு அனுப்பவேண்டுமா என்ற வருத்தம் அதிகமாக இருந்தது, ஆனால் குடும்ப சூழ்நிலை அறிந்த நான்  வேலைக்கு சென்றேன், மாதம் ஒரு நாள் வீட்டிற்கு செல்வேன். ஆண்டுகள் நொடிகளாய் கழிந்தன படிப்படியாய் சம்பள உயர்வு, வாழ்க்கையிலும் முன்னேற்றம், தம்பி B.E  முடித்தான், தங்கை சுமாராகத்தான் படிப்பாள், ஆனால் விளையாட்டு, பொதுஅறிவு, ஹிந்தி, கணினி போன்றவைகளில் கைதேர்ந்தவளாய் விளங்கினாள்.

தற்போது துபாயில் பணிபுரிகிறேன், தம்பி M.E பயில்கிறான், தங்கை ஒரு நல்ல இடத்தில் மணமுடிக்கபெற்று கணவரோடும் ஒரு அழகான, அறிவானா, துடுக்கான மகனோடும் சந்தோஷமாக வாழ்கிறாள். எனது பெற்றோரின் ஆசையான, அவர்களின் சொந்த ஊரில் ஒரு வீடு, நிறைவேற்றிவிட்டேன்.

ஆனால் எவ்வளவு கூறியும் கேட்க்காமல், ஓய்வு பெற இன்னும் நான்கு வருடங்கள் தானே என்று அசராமல் உழைத்துக்கொண்டு தான் இருக்கிறார் என் தந்தை அவருக்கு பக்கபலமாய் என் தாய். கூடிய விரைவில் நாடு திரும்பி அவர்களுடன் வாழ ஆசை.

என் குடும்பம் ஒரு கதம்பம்....!!!

இந்த பதிவினை என் தாய் தந்தையர்க்கு சமர்பிக்கிறேன்.